Friday, April 8, 2011

நடுநிசி நாய்கள் - கௌதம் மேனனின் துணிச்சல்

6 பாட்டு (அதில் ஒன்று குத்துபாட்டு) 5 சண்டைக்காட்சிகள், கதைக்கு சம்பந்தமில்லாத காமெடி அல்லது சற்று முற்போக்காக கதையோடு சம்பந்தப்பட்ட காமெடி, கண்ணகி வசனம் பேசும் அரைக்கால் சட்டை போட்ட ஹீரோயின், நாட்டு மக்களை, ஊர்மக்களை, நியாய-தர்மத்தை, குறைந்த பட்சம் ஹீரோயினையாவது காப்பாற்றத் துடிக்கும் ஹீரோ என இந்த வழக்கமான பார்முலாவிலிருந்து தமிழ் சினிமா மீளாதா............ என கண்கள் கலங்க ஏங்கியவர்கள் அனைவரும் சங்கம் அமைத்து பாராட்ட வேண்டிய படம் நடுநிசி நாய்கள். கௌதம் மேனனை திட்டுவதாய் இருந்தால் ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் திட்ட வேண்டும். இப்படி ஒரு கட்டுடைத்தலுக்கான தைரியம் தனது 10வது படத்தில் தான் அவருக்கு வந்திருக்கிறது என்றால் அவரை திட்டித் தீர்க்கத் தான் வேண்டும். எனக்குத் தெரிந்து விவேகானந்தர் உயிருடன் வந்து வேதவியாக்யானம் செய்தாலும் அதையும் விமர்சனம் செய்வதற்கு இங்கு நூறு பேர் இருக்கத்தான் செய்வார்கள்.


முதலாவதாக சமுதாயத்திற்கு பாடம் நடத்துபவர்களாக இயக்குனர்கள் ஆக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும். சமுதாயம் என்பது எதையாவது, யாரிடமிருந்தாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் எதிர்பார்ப்பது அவர்களது சொந்த மனநோய். அந்த மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட்டு, சமுதாயத்தின் மீது அதன் அனுமதி இல்லாமல் தங்கள் சொந்தக் கருத்துக்களை திணிப்பதை, இதே சமுதாயத்தில் பிறந்த கருத்து சுதந்திரம் மிக்க அல்லது அதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட நானோ, மற்ற யாரோ எதிர்ப்பு தெரிவிப்பதை எந்த வித ஹிட்லர் மனோபாவமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வன்முறை என்ற வரையறைக்குள் ஒழுக்கத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் போராட்டங்களும், கருத்துப் பரிமாற்றம் என்கிற பெயரால் நிகழ்த்தப்படும் வசவுகளும் நிச்சயமாய் அடங்கும்.

சமுதாயம் சினிமாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இல்லை என்பதையும். சமுதாயத்திற்கென சொந்தமான ஆறாவது அறிவு உள்ளது என்பதையும், மக்கள் தங்கள் அனுபவங்களிலிலிருந்தும், வடுக்களிலிருந்துமே தங்களது வாழ்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள் என்பதையும் தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்த பட்சம் பீடிங் பாட்டிலில் பாலை ஊற்றி குடிக்கும் குழந்தைகளைப் போல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஆறாவது அறிவை மதிக்கக் கூடாது என்பதையும், சினிமா பார்த்து வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஆட்டுமந்தைகளாய் அவர்களை நினைக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு திரைப்படத்தை அதன் கதையை மட்டுமே வைத்து மதிப்பிடப்பட வேண்டுமென்பதில்லை. அதன் ஸ்கீரின் ப்ளே, கதையை சொல்லும்முறை, எடுத்தாளப்பட்டிருக்கும் எதார்த்தமுறை, ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, நேர்த்தியான காட்சியமைப்பு, காட்சியமைப்பில் செய்யப்பட்டிருக்கும் புதுமை, இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையே, படத்தின் அடிப்படை ஜீவனான உயிரோட்டம் இல்லையென்றால் அதை மக்களின் ரசனை என்னும் அணிச்சை அமைப்பு தானாகவே ஒதுக்கித் தள்ளிவிடும். அதனால் யாரும் புறக்கணியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை படத்தில் ரசனை சிறிதளவேனும் இருக்கும் பட்சத்தில் என்னதான் கரடியாய் கத்தினாலும் படம் ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. கமல் போன்ற மேதைகள் ரஜினியிடம் தோற்றுப் போனதையும், விஜய் போன்ற நடிகர்களிடம் இன்றைய கதையமைப்பு கொண்ட திரைப்படங்கள் தோற்றுக் கொண்டிருப்பதையும் கவனிக்கமால் புறந்தள்ளக் கூடாது. ரசனை என்னும் அடிப்படை அமைப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிற ரீதியில் மேதமைத்தனத்தை காட்ட நினைக்கும் பொழுது மண்ணைக் கவ்வுவது தமிழக சினிமாத்துறையில் மிகச் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் அப்படியானதொரு மேதமைத்தனத்தை வெளிப்படுத்தும் படம் இல்லையென்று அடித்துச் சொல்லலாம். திரு.கமல்ஹாசன் அவர்களின் சில திரைப்படங்களில் கையாளப்பட்டுள்ள லைவ் ரிக்கார்டிங் எனப்படும் ஒலிப்பதிவு தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் (அதிர்ச்சி) அலைகளிலிருந்து மீள்வதற்கு ஒரு வாய்ப்பாக நடுநிசிநாய்கள் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படத்தின் ஒலி அமைப்பு சிறப்பான அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும்; இல்லை.

ரீ ரிக்கார்டிங்கே இல்லாத ஒரு படம் கலைஞர் டி.வியில் வரும் குறும்படங்களைப் போல் இருக்கப் போகிறது என்கிற சிறிய பயத்துடனேயே தான் படம் பார்க்கச் சென்றேன். முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைத்து விட்டார் இயக்குனர். மனோஜ் பரமஹம்சா......... பி.சி. ஸ்ரீராம், ரவி. கே. சந்திரன், ராஜிவ் மேனன் வரிசையில் உலகத்தரமான போட்டோகிராபியை நிரூபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கேமராமேன். தமிழகத்திற்கு கிடைத்த மற்றொரு அருமையான கேமராமேன். ஹைஸ்பீடு கேமராவை கொண்டு இயக்கப்பட்ட முதல் காட்சியிலேயே தனது தரத்தை நிரூபித்துக் காட்டிவிட்டார். புகைப்பட மொழி தெரிந்தவர்களால் மட்டுமே உணர முடிந்த அற்புதமான காட்சி அது. இவை போன்ற சேலஞ்சான காட்சியமைப்புகளை வடிவமைப்பதில் இயக்குனரின் ரசனையும், கேமராமேனுடன் ஒன்றிப் போக வேண்டும். இருவரும் இருகண்கள் போல் செயல்பட்டால் ஒழிய கவனத்தை ஈர்க்கக் கூடிய காட்சிகளை உருவாக்க முடியாது.

கிறிஸ்டோபர் நோலனனின் மெமண்டோ திரைப்படத்தின் முதற் காட்சியும் கிட்டத்தட்ட இக்காட்சியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கும். (அக்காட்சி ரிவர்சில் அமைக்கப்பட்டிருக்கும்,) வீரா என்கிற சமர் நடுரோட்டில் ஒரு போலீஸ் காரரை சுட்டுத் தள்ளும் காட்சி அது. படத்தின் மையப்பகுதியில் நடைபெறும் ஒரு காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது.

பின் சில போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதற்காகவும், பெண்களை வன்கொடுமை மற்றும் கொலை செய்ததற்காகவும் வீரா கைது செய்யப்பட்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் படத்தின் இறுதிக் காட்சியும் கூட. இறுதிக்காட்சியிலிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்பது போல திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சியாக எடுத்துக் காட்டப்படுகிறது.

வீரா என்கிற சமர் தனது குழந்தைப் பருவத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறான். சமரின் தந்தை பிரிட்டிஷ் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘ஐஸ் வைட் ஷட’; திரைப்படத்தை திருட்டு வி.சி.டி.யில் பார்த்திருப்பார் போல. அப்படத்தில் வரும் காட்சிகளைப் போலவே சில விஷயங்களை தனது வீட்டில் செய்கிறார். தந்தையின் பாலுணர்வு வன்முறைகளை பார்த்து வெதும்பிப் போன சமர் பள்ளியிலும், மற்ற இடங்களில் பிறரிடமிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்கிறான். மனநிலை பிறழ்ந்த நிலையில் திரிகிறான்.

சமரின் பக்கத்து வீட்டுப் பெண்ணான மீனாட்சி குழந்தையான சமரின் வித்தியாசமான நடவடிக்கைகளை பார்த்து விட்டு அவன் மேல் பரிதாபப்படுகிறாள். அவனிடம் பேச முற்படுகிறாள். அவன் பேசாமல் விலகிச் செல்லவே, அவனது வீட்டில் ஏதோ தவறு நடைபெறுகிறது என்பதை யு+கித்து உளவு வேலையில் ஈடுபடுகிறாள். சமர் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவன் வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் பார்த்துவிடுகிறாள். உடனே போலீஸ் மூலம் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அப்போது நடைபெறும் சண்டையில் சமரின் தந்தை தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிடுகிறார். சமர் வீரா எனப் பெயர்மாற்றப்பட்டு மீனாட்சியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறான்.

13 வயதில் மீனாட்சியின் மீது சமருக்கு காதல் வருகிறது. இது சற்று ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. பின் 18 வயதில் ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியை வற்புறுத்தி உறவுகொள்கிறான். முறையற்ற இந்த உறவிலிருந்து தப்பிக்க நினைக்கும் மீனாட்சி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலிப்பதாக துரத்திக் கொண்டிருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள். தனக்கென இருந்த மீனாட்சி இன்னொருவனுடன் முதலிரவில் இருப்பதை ஜீரணிக்க முடியாத வீரா முதலிரவின் போது மீனாட்சியின் கணவனை குத்திக் கொள்கிறான். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் மீனாட்சியின் கணவன் இறந்துவிடுகிறான். மீனாட்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிர் துறக்கிறாள்.

மருத்துவமனையிலிருந்து வீராவின் கற்பனைகள் தொடர்கின்றன.

மருத்துவமனையில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி தனது வழக்கறிஞருடன் பேசுவது, வீராவுடன் பேசுவது, டிம் லைட்டிங், ஒரேகோணத்தில் கதையை நகர்த்துதல் என இக்காட்சி புதுமையாக அமைந்திருந்தது.

கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயாவில் இதுபோன்றதொரு காட்சியை அமைத்திருப்பார். கடைசி காட்சியில் தனது மிக நீண்ட கற்பனை காட்சியான அந்த காட்சியில் சிம்பு, த்ரிஷாவிடம் தன்னுடைய தேக்கி வைக்கப்பட்ட காதலை நேரடியாக சொல்லாமல் கன்வே செய்வார். மிகநீண்ட க்ளோசப் காட்சியான அந்த காட்சியும், வசனமும். அற்புதமாக அமைந்திருந்தது. படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஒன்றுதலையும், டெப்தான உணர்வையும் கொடுத்து அற்புதமான பதிவை விட்டுச் சென்றது

இதுபோன்ற காட்சிகளை உலகப் புகழ்பெற்ற இயக்குனர்கள் தங்கள் படங்களில் உபயோகிப்பது உண்டு. மார்ட்டின் ஸ்கார்செஸி தன்னுடை பல படங்களில் இதைப் போன்ற காட்சிகளை பயன்படுத்தியிருப்பார். கேப் பியர், கேங்ஸ் ஆப் நியு+யார்க், ரெய்ஜிங் புல், ஹுஸ் தேட் நாக்கிங் அட் மை டோர், டிபார்ட்டட் போன்ற திரைப்படங்களில் இதுபோன்ற மிக நீண்டி காட்சிகளை பயன்படுத்தியிருப்பார். ஒரு பிரேமில் தொடர்ச்சியாக ஒருசீன் முழுவதுமாக கதை சொல்லும் இதுபோன்றதொரு காட்சியை மிஸ்கின் கூட தனது யுத்தம்செய் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

வீரா தனது கற்பனைக்குள் செல்லும் அந்த காட்சிக்கு இதுபோன்றதொரு வித்தியாசமான ஸ்கிரீன்ப்ளே நன்றாக அமைந்திருந்தது. கௌதம் தன்னை நிறையவே அப்டேட் செய்திருக்கிறார். பெரும்பாலும் கேமரா கோணங்கள், கலரிங், சில்நெஸ், எடிட்டிங் என கவனம் செலுத்துபவர்கள், ஒன்றுதலுடன் கூடிய கதையமைப்பில் கோட்டை விட்டுவிடுவார்கள், அல்லது நல்ல கதையை உருவாக்கி விடுவார்கள், ஆனால் காட்சிகளை அமைப்பதில் உள்ள நேர்த்தியை விட்டுவிடுவார்கள். இவை இரண்டையுமே நேர்த்தியாக கையாளும் திறமையுடன் கௌதம் இருக்கிறார். தன்னுடைய கதையை தானே உருவாக்குகிறார். அல்லது ஒரு ரைட்டருடன் சில மாதங்களை செலவிடுகிறார். இதனாலேயே திரைக்கதையுடன் படம் பார்ப்பவர்களை ஒன்றச்செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று காணப்படுகிறார். ராஜிவ் மேனனிடம் கற்றுக் கொண்ட புகைப்படக்கலையை மிக நேர்த்தியாக உபயோகித்து எந்த ஒரு இடத்திலும் சோடை போகாமல் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், இந்த டயலாக் என்கிற விஷயத்தில் தனது முன்னோடியாக திரு. மணிரத்தினத்தை நினைத்துக் கொள்கிறார் போல. ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழி பெயர்த்தால் இப்படித்தான் வசனம் வெளிப்படும் என்று நன்றாக தெரிந்திருந்தும், அவரால் அதிலிருந்த மீள முடியவில்லை. அவரே அவரை கிண்டலும் செய்து கொள்கிறார்.

மீனாட்சியம்மாளின் சொத்துக்கள் அனைத்தும் வீராவை வந்தடைய அவன் தன் இருப்பிடத்தை மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்றிக் கொள்கிறான். சென்னை என்றாலே ஈ.சி.ஆர். ரோடுதான் கொளதம் மேனனுக்கு. அந்த இடம் கௌதம்மை மிகவும் கவர்ந்து விட்டதுபோல. ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ஏதோ ஒரு போர்ட் கிளப்பை காட்டி வீடு என்கிறார். மீனாட்சியம்மாள் அவ்வளவு பெரிய பணக்காரி என்று அப்பொழுதுதான் தெரிகிறது. நியாயமாக ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.வோ, எம்.பி.க்கோ மட்டும் தான் அப்படிப்பட்டதொரு பிரமாண்ட பங்களா இருக்கும். அப்படியே வேறு யாராவது தனி நபர் ஒருவர் வைத்திருந்தாலும், மிரட்டி பிடுங்கி விட மாட்டார்களா என்ன?

வீட்டிற்குள் நுழையும் வீரா, வேறு கெட்டப்பிற்கு மாறியிருப்பதன் மூலம் சில ஆண்டுகளை கடந்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த விக்கை கழற்றிய பிறகுதான் வீராவுக்கு இயல்பாக இருந்தது. பழைய சிவாஜி படங்களில் உபயோகப்படுத்திய விக்கை கவுதம் ஏன் உபயோகப்படுத்துகிறார் என்கிற யோசனையில் சில காட்சிகளை தவறவிட்டுவிட்டேன். ஒரு காட்சிக்கு இவ்வளவு நேர்த்தி பார்க்கும் கவுதம் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை.

மீனாட்சியம்மாள் வீராவுக்குள் இருக்கும் சமருக்கு மட்டுமே உருவமாக காட்சி தருகிறாள். இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இல்லை. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். அந்நியன் படம் பார்த்து தெளிவாக இருந்த பலர் இதைப் பார்த்து குழப்பிக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. வீராவுக்குள் சமர் என்கிற ஒருவன் இருக்கிறான் என்பது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி, சமருக்கு ஒரு உருவம் காட்சி தருகிறது என்பது என்னவிதமான மனநோய் என்று தெரியவில்லை. அந்த உருவத்துடன் பேசுகிறான். அந்த உருவம் அவனுக்கு பதில் தருகிறது. அந்த உருவம் தீயில் கருகிப் போய், தலைமுடியெல்லாம் இல்லாமல் மொட்டையாக காட்சித் தருகிறது. அதனால் அந்த உருவத்திற்கு அழகான தலைமுடி மீது ஒருவித மோகம் ஏற்பட்டுவிடுகிறது.

இளம் வயதினான வீராவுக்கு பெண்கள் மீதான மோகம் எல்லை கடந்து போக பல பெண்களை காதலித்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து கத்தியால் குத்தி கொள்கிறான். ஆனால் அவனது மனதில் கொலை செய்வது எல்லாம் மீனாட்சியம்மாள் தான் எனத் தெரிகிறது. மீனாட்சியம்மாளுக்கு அவர்களது முடியை கத்தரித்து காணிக்கையாக கொடுக்கிறான். அது அவனது தாழ்வு மனப்பான்மை. தன்னால் தான் மீனாட்சியம்மாளுக்கு தலைமுடி இல்லாமல் போனது என்ற அவனது உள்மன தாழ்வு மனப்பான்மையே இறந்து போன பெண்களின் தலைமுடியை அவளுக்கு காணிக்கையாக்குவதாகக் காட்டப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தன்னையே அறியாமல் கொலை செய்கிறான் என்பது சற்று நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

இப்படிப் பல பெண்களை கொலை செய்து, சில பெண்களை நிலவறையில் அடைத்து வைத்து சித்ரவதைசெய்து என கதை நகர்ந்து கொண்டிருக்கையில் சமீரா ரெட்டி வருகிறார். இதுவரை தன்னிடம் இருந்ததெல்லாம் இன்பாக்சுவேஷன், இப்பொழுது வந்தது தான் காதல் என்று சமீரா ரெட்டியை கண்டதும் உணர்கிறான் வீரா. அவளுடன் உண்மையாக வாழ நினைக்கிறான். ஆனால் சமீரா ஏற்கனவே வேறு ஒருவனை காதலிக்கிறாள். சில நாட்களாக சமீராவையும், அவளது காதலனையும் பின்தொடரும் வீரா, ஒருநாள் சத்யம் தியேட்டருக்கு காதலனுடன் படம் பார்க்கச் செல்கையில் பின் தொடர்கிறான். சமீராவின் காதலனை தியேட்டரிலிருந்து மொபைல் மூலமாக வெளியே அழைத்து அவனது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அவனைக் காணாமல் தேடி வரும் சமீராவை நயமாக பேசி கடத்திச் செல்கிறான். கடத்திச் செல்லும் போது ஏற்பட்ட கைகலப்பில் சமீராவை கத்தியால் வயிற்றில் குத்தி விடுகிறான். ஆனால் குத்தியது வீரா இல்லை, சமர் என்று விடும் கதை, சாரி சொல்லும் கதை சற்று நம்ப முடியாததாக உள்ளது. குத்திய சமர் மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறான்.

நைட் பாரா வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு கார் சாலையோரமாக நின்றிருப்பதைப் பார்த்து தட்டுகிறார். அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து எழுவது போல வீரா மயக்கத்தில் இருந்து எழுகிறான். போலீசிடம் மாட்டிக் கொள்கிறான். அப்போது வீரா தப்பிக்க முயற்சி செய்கிறான். தப்பிக்கும் முயற்சியில் 2 போலீஸ்காரர்களை சுட்டுவிடுகிறான். போலீசை சுடும் அந்தக் காட்சிதான் படத்தின் முதல் காட்சி.

பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமீராவை போலீஸ் உடையணிந்து சென்று கடத்திச்செல்கிறான். வயிற்றில் காயத்துடன் இருக்கும் சமீராவை தோளில் துண்டை போட்டுச்செல்வது போல்தனது வீட்டிற்குள் தூக்கிச்செல்கிறான் வீரா. சமீராவும் ஏதோ வயிற்றுவலி வந்தது போல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சிக்கிறார். கௌதம் இந்தக் காட்சியில் தான் படத்தின் மொத்த கட்டமைப்பையும் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு நாள் மீனாட்சியம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் வீராவின் கற்பனை என்பதை இந்தக்காட்சியில் தான் கௌதம் பகிரங்கப்படுத்துகிறார். சமீரா தான் மாட்டிக் கொண்டிருப்பது ஒரு மனநோயாளியிடம் என தெரிந்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.

டகாஷி மைக் என்கிற ஜப்பானிய இயக்குனரின் புகழ்பெற்ற திரைப்படமான ஆடிஷன் என்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சி, வீரா தன் கற்பனைக் கதாபாத்திரத்துடன் பேசும்போது அமைக்கப்பட்ட காட்சியோடு ஒப்பிடத்தக்கது. ஆண்டனியின் எடிட்டிங் இந்த இடத்தில் மொழியால் சொல்ல முடியாத வார்த்தைகளை அழகாக பேசிச் செல்லும். சில விஷயங்களை உணர மட்டுமே முடியும். அது போன்றதொரு அற்புதமான காட்சியமைப்பு அது.

இறுதிக்காட்சியில் நிலவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் காட்டப்படுகிறார்கள். வீராவின் அத்தனை கொடூரங்களும் பகிரங்கப்படுத்தப்படுகிறது. போலீஸ் அதிகாரி ஒருவரின் முயற்சியின் பெயரில் சமீரா காப்பாற்றப்படுகிறாள்.

சற்று மொக்கையான விஷயம், இறுதிக்காட்சியில், மனநோயாளிகள் கொலைசெய்யும் பொழுது தங்கள் நிலையில் இருப்பதில்லை என்று கூறுவது. அவர்களால் செய்யப்படும் கொலைகளுக்குஅவர்கள் பொறுப்பல்ல என்று சொல்வது மட்டுமல்ல, வீரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது மற்றொரு பெண் மனநோயாளியைப் பார்த்து வினோதமாக சிரித்துக்கொள்வது. ஏலியன் திரைப்படத்தில் தான் இதுபோன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஏலியன்கள் மனித உருவத்தில் இருக்கும். பெண் உருவத்தில் இருக்கும் ஏலியன், மற்றொரு ஆண் ஏலியனை தனக்குள் அடையாளம் கண்டு கொண்டு அவனைப் பார்த்து வினோதமாகச் சிரிக்கும். காதலர்கள் தங்கள் இனத்தை தேடி கண்டுபிடித்துக் கொள்கிறார்கள் என்ற கருத்தை மனநிலை பாதிக்கப்பட்டவர்களிடையே எடுத்துக்காட்ட நினைத்தது மொக்கையாக இருந்தது.

கௌதம் மேனனின் மேக்கிங் அவரது மற்ற படங்களை விட சிறப்பாக அமைந்திருக்கிறது. கதையை பொறுத்தவரை தமிழகத்திற்கு சற்று பொருந்தாததாக மட்டுமல்லாமல், யார் மனதிலும் ஒட்டாமல் சென்று விடுகிறது. படம் ஒரு மோசமான உணர்வை ஏற்படுத்துவது உண்மைதான் என கௌதமே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கதையின் மையம் அப்படிப்பட்ட காட்சிகளை அமைக்கவே உதவியாக இருந்திருக்கும் போல. ஆனால், நடுநிசிநாய்கள்போன்ற புதுமையான மேக்கிங் கொண்ட திரைப்படங்கள் தான் திரைப்படங்களை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச்செல்வதற்கான துணிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும். பல இளம் இயக்குனர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பது தான் என் வேண்டுகோள்.

நில், உட்கார், செல் - அதிகாரமற்ற பிரதமர் பதவி


பிரதமர் என்றால் யார்? அவருக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பன போன்ற கேள்விகளை கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டால் தெளிவாக சொல்லிவிடுவார்கள். அந்த வாய்பேச முடியாத ஊமைத் தாத்தாவை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சிறப்பான மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பேச்சு வர மாங்காடு அம்மன் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை தோறும் என் அம்மாவுடன் சென்று வழிபாடு செய்கிறேன் என்று மனம் நோகக் கூறுவார்கள்.

பிரதமரும் இப்பொழுது பேசுவார், அப்பொழுது பேசுவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஒருவழியாக பேசிவிட்டார்.

அம்மன் ஒருவழியாக கண் திறந்து அருள் புரிந்துவிட்டார். பிரதமருக்கு பேச்சு வந்ததில் கடவுளின் பங்கு மகத்தானது என்பது யாருக்கும் தெரியாது என்றாலும் ஆத்திகர்கள் தாராளமாக நம்பலாம். இது நடந்து விட்டது. பிரதமர் பேசிவிட்டார். அது உண்மை. சில உண்மைகளை நம்பித்தான் ஆக வேண்டும். நான் நம்பமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க வேண்டாம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகள் அனைத்தும் உண்மையே. நான் நம்பமாட்டேன் அதில் ஏதோ கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் சொல்லத் தேவையில்லை. அதிசயங்கள் இந்த உலகில் நடக்கத்தான் செய்யும். கலங்கக் கூடாது. மிரளக் கூடாது.

அவர் கூறிய வார்த்தைகள்:

2ஜி அலைக்கற்றை உரிமம் யாருக்கு வழங்குவது எந்த அடிப்படையில் வழங்குவது என்பதை முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாதான் முடிவு செய்தார். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு எடுத்தது குறித்து எனக்கோ அல்லது மத்திய அமைச்சரவைக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இனிமேல் இப்படி கூட சொல்லலாம் நம் பிரதமர். "என்ன? கோஹினூர் வைரத்தை லண்டனுக்கு எடுத்துச் சென்று விட்டார்களா? என்னிடம் சொல்லவே இல்லையே, எனக்குத் தெரியவே தெரியாதே? யாரைக் கேட்டு எடுத்துப் போனார்கள். ஏன் என்னிடம் சொல்லவில்லை. (அப்படி சொன்னால் தான் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்பது வேறு விஷயம்) நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது எடுத்துச் சென்றுவிட்டார்களா? ஏன் என்னை எழுப்பிவிடவில்லை. இது என்னை அறியாமல் நிகழ்ந்துவிட்டது. இதற்கு நான் பொறுப்பில்லை. (மிக முக்கியமாக) நான் இதற்காகவெல்லாம் பதவி விலகமாட்டேன்" என்றெல்லாம் கூட கூறலாம். (இந்த ஷர்க்தான் பிரதமரிடம் மிகவும் பிடித்த விஷயம்) எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும் சாம்பாரில் உப்பு இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி கவலைப்படக்கூடாது என்று உறுதிமொழியேற்றிருக்கும் இந்திய பாமர மக்கள் எவ்வளவு பெரிய அரசியல் அதிர்ச்சி அறிக்கைகளையும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மானாட மயிலாட பார்த்து இன்புற்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.

வருடங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 60 வருடங்களுக்கு முன் கோஹினூர் வைரத்தை எடுத்துக் கொண்டு சென்றால் என்ன, அல்லது 4 வருடங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடியை அடித்துக் கொண்டு சென்றால் தான் என்ன? ஒரே பதில்தான் எனக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையே?

இப்படி ஒரு இயக்குனர் கூறினால் யாராவது ஒத்துக்கொள்வார்களா? படம் சரியாக வரவில்லை என்றால் நான் பொறுப்பில்லை. அந்த கேமராமேன் தான் கேமராவில் ஃபிலிம் போட மறந்துவிட்டார். இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. நான் அவரிடம் கேட்‍டேன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். அதனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன்.

இதுபோன்ற அபத்த பதில்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள உலகிலேயே இந்தியர்களுக்கு மட்டும் தான் தகுதி உண்டு. இந்தியர்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. இனிமேல் பதில் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கூறலாம். கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

இனி உலக அரசியல் மேதைகள் எல்லாம் இந்த தேர்தல் வெற்றி கண்டுபிடிப்பை பற்றி இந்தியா வந்து பயின்று தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்தல் வெற்றி கண்டுபிடிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பெயரில் பேடண்ட் உரிமை வாங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி.

மருத்துவ உலகில் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. "வருமுன் காப்போம்" என்ற அந்த வாக்கியம் உடலுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் மிகப்பொருந்தும். சில நோய்கள் குணப்படுத்தப்பட முடியாத அளவுக்கு உடலில் பரவி விடுவது உண்டு. அவ்வாறு பரவிய பின் நீ மருத்துவர்கள் முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவாய் என்று கூறினால் எப்படி உணருவான் அந்த நோயாளி. கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போல இந்தியா இன்றோ, நாளையோ என ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மிக மோசமாக ஒரு மனசாட்சியே இல்லாமல் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருடுபவன் கண்ணுக்கு முன் திருடிச் செல்வதைப் போல, அது தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கோமா நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்தசூழ்நிலையில், ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என கிச்சு கிச்சு மூட்டினால் சிரித்து விட முடியுமா? என்ன?

இங்கு 80 சதவீதம் பேருக்கு தினசரி சராசரி வருமானமே 40 ரூபாய்தான் அந்த வருமானத்திற்குள் தான் ஒரு இந்தியன் 3 வேலை சாப்பிட வேண்டும். உடை உடுத்தி மானம் காத்துக் கொள்ள வேண்டும். இவர்களிடம் போய் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்தால், இந்த மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் அதற்கு எத்தனை பூஜ்ஜியம் போடுவது என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இங்கு வறுமையை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதன் பெயர் விதி. ஆனால், இந்திய மக்களை பொறுத்த வரை இத்தனை பூஜ்ஜியத்திற்கு மதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். தாங்கள் எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறோம் என்று அவர்களால் விளங்கிக் கொள்ளவே முடியாது. தாங்கள் அடைந்த பாதிப்பு என்ன என்றும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இங்கு விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. வருமானம் குறைந்து கொண்டே போகிறது. இந்த நிலையில், யோகிகளைப் போல் தினசரி ஒருவேலை உணவு உண்டு வாழ்ந்து மடிவது என்ற ஆன்மீக கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மக்கள் வலியுறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எதற்கு உடை உடுத்த ‍வேண்டும் காந்தி மகான் சட்டை கூட போடாமல் தானே வாழ்ந்தார். அவரையே பின்பற்றுங்கள் என்று கூறினாலும் கூறலாம். ஆனால் கட்டியிருக்கும் கோவணத்தை கழற்றி விடுவார்களா? அல்லது மாட்டார்களா? என்று எனக்குத் சத்தியமாகத் தெரியாது.

யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் நான் சில கருத்துக்களைக் கூறலாமே தவிர, இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணிக் கட்சி தலைவரே. அந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது.

இனிமேல் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தவறாக அச்சிடப்பட்ட சில வார்த்தைகளை நீக்கி விடலாம். ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவின் உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் என ஏன் பொய் சொல்ல வேண்டும். உண்மை என்ன என்று இந்தியப் பிரதமர் தன் வாய் மொழியாகவே கூறிவிட்டார். பிரதமரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இனிமேல் அதையெல்லாம் மாற்றி எழுத் வேண்டும். இனிவரும் எதிர்கால இளைய சமுதாயத்தினர் பிரதமரைவிட அதிகாரமிக்க அந்தத் தலைவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?.

பிரதமரை விட அதிகாரம் மிக்கவர் அவர் சார்ந்த கட்சியின் தலைவர் என்கிற பகிரங்க உண்மையை பிரகடனப்படுத்திய பிரதமர் உண்மையிலேயே தைரியம் மிக்கவர்தான் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. இந்திய அரசியலமைப்பில் இத்தகைய அதிகாரப் பகிர்வுகள் பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இல்லையா எனத் தெரியவில்லை. எனினும், நடைமுறையில் உள்ள உண்மைகளை புறக்கணித்துவிட முடியாது அல்லவா? பிரதமர் தனக்கிருக்கும் அதிகாரம் பற்றி தானே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தை பற்றி என்ன கவலை. இனிமேல் பிரதமரின் வாய்மொழி வார்த்தைகளையே ஒப்புக்​ கொள்ளலாம். நில் என்றால் நிற்கவும், உட்கார் என்றால் உட்காரவும், செல் என்றால் செல்லவும், தெரிந்தவர்கள் பிரதமராகக் கூடிய தகுதி படைத்தவர்கள் என்பதை இந்நாட்டு மக்கள் உணர வேண்டும்.

யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் தான் சில கருத்துக்களை கூறுவதற்கான உரிமையை மட்டும் ஏன்? தன்னகத்தே பிரதமர் வைத்துக் கொள்ள வேண்டும். ‌அதையும் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டால், நிம்மதியாகப் போய்விடுமே.

ராசா மீண்டும் அமைச்சராக அனுமதிக்கப்பட்ட போது அவர் துளியும் தவறிழைக்காதவர் என்கிற உன்னதமான மனநிலையுடன், தான் இருந்ததாக பிரதமர் ஒத்துக் கொள்வாரா? நான் அப்போது நினைக்கவே இல்லை, ராசா தவறிழைத்திருப்பார் என்று, என பிரதமரால் தைரியமாக கூற முடியுமா? இரண்டாம் முறையும் ராசா அமைச்சராக்கப்படும் போது, தனக்கு அனைத்தும் தெரிந்தே இருந்தது என்கிற உண்மையை பிரதமர் ஒத்துக்கொண்டாலே தான் சீசரின் மனைவியைப் போல, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கூறிக் கொள்ளும் தகுதியைப் பெறுவார் பிரதமர்.

ஸ்பெக்ட்ரம் உட்பட எந்த பிரச்னைகள் குறித்தும் விளக்கமான பதில்களை அளிக்க தயாராக உள்ளேன்.

இந்த நகைச்சுவை சற்று கடினமானது தான் என்றாலும் யாரும் சிரிக்கக் கூடாது. ஜன்னலுக்கு (மர) சட்டம் என்று மற்றொரு பெயர் உண்டு. அதன் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்களா? என யாரும் கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் ஜாக்கிரதை. வாயில் விரல் வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

இந்த வார்த்தைகளை கவனிக்கும்போது, கேஸ்ட் அவே என்கிற திரைப்படத்தில் வரும் டாம்ஹேங்ஸ் கதாபாத்திரம் போல பிரதமர் இவ்வளவு நாளும் ஏதேனும் ஒரு தீவில் மாட்டிக்கொண்டிருந்தாரோ என்கிற சந்தேகம் தான் வருகிறது. இவ்வளவு நாளும் சி.என்.என்., ​ஹெட்லைன்ஸ் டுடே, ‌‌டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. என ஒவ்வொரு ஆங்கில சானல்களிலும் ஸ்பெக்ட்ரம் விஷயத்தை பற்றி கிழித்து நாறடித்து, தோரணம் கட்டி தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிரதமரால் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் சொல்லிவிட முடியாது. நான் இதுவரை மௌண விரதம் பூண்டிருந்தேன் என்றும் சொன்னாலும் கேவலமாக இருக்கும். என்ன சொல்வது. நான் ஒரு தீவில் மாட்டிக்கொண்டேன். இப்பொழுதுதான் தப்பித்து வந்தேன் என்ற காதுகொடுத்தும் கேட்க முடியாத பொய்யை கூறினால் மிகக் கேவலமாக இருக்கும். வேறு என்னதான் சொல்வது. இதுநாள் வரை நாடே பற்றி எரிந்து கொண்டிருந்த வேலைகளில் எல்லாம் பதில்அளிக்காமல் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, இத்தனை வருடங்களுக்குப் பிறகு விளக்கமான பதில் அளிக்க நான் தயார் எனக் கூறுவது காதில் பூ சுற்றுவது என்பதை விட பூக்குவியலுக்குள் காதை நுழைப்பது என்று கூறுவது தான் சரியாகப் பொருந்தும்.

ஏன் இப்பொழுது மட்டும் விளக்கம் அளிக்க முன்வர‍ வேண்டும். இப்பொழும் விளக்கமளிக்க முன்வரவில்லை என்றால். தனது நேர்மைக்கு பங்கம் வந்து விடுமோ என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம். இப்பொழுது ஒவ்வொரு கட்டுக்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள பார்க்கிறார். தான் தூய்மையாக இருந்ததாகவும், தன்னை சுற்றியிருந்தவர்கள் தான் நம்பியாரைப் போல் சதி வலைகளை பின்னிவிட்டார்கள் என்று நிரூபிக்கவும் முயல்வதாகக் கூட இருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஏதோ ஒன்று மோசமாக நடந்திருக்கிறது என்பதை சுற்றி வளைத்து ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர்.

கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராசாவுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராசாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது.

ஏன் புறா மூலமாக தூது விட்டிருக்க ‍வேண்டியது தானே? நான் நம் நாட்டின் பழைய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காகத்தான் புறாத் தூது விட்டேன் என்றாவது கூறியிருக்கலாம். இத்தனை வருடத்தில் ஒரு கடிதம். ஒரே ஒரு கடிதம். நல்லவேலை அதற்கு பதில் வந்து விட்டது. இல்லையெனில் அவர் மனம் புண்பட்டிருக்கும். பதில் என்ற ஒன்று வந்துவிட்டதல்லவா? பின் எதற்காக மெனக்கெட வேண்டும் என நினைத்தோ என்னவோ? அது குறித்து 2011ம் ஆண்டு வரை கவலைப்படவே இல்லை. ஒன்று பின்னிருந்து இயக்குபவரை கையை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை தான் முழு பொறுப்பேற்றுக் கொண்டு அனைத்து விஷயங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். ஏன் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என பாதி என் பொறுப்பு, மீதிக்கு கட்சித் தலைவர் தான் பொறுப்பு என் பாகம் பிரிக்க வேண்டும். உண்மையில் கடிதம் எழுதியதன் மூலம் தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்திருந்த பிரதமர், நடைபெற்ற அத்துனை தவறுகளிலும் தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டுமல்லவா? இந்த நான்காண்டுகளில் நடைபெற்ற அத்தனை ஊழல்களிலும் தனக்கிருக்கும் பொறுப்பை நிரூபித்திருக்க வேண்டுமல்லவா? பிரதமர் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று நான் தான் பொறுப்பற்று இருந்தேன். அல்லது தான் பொறுப்புடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பிரதமருடையது.

இந்தியாவின் 50 சதவீத பொருளாதாரம் வெறும் 50 தொழிலதிபர்கள் கையில் சிக்குண்டு கிடக்கிறது. அவர்கள் தான் அரசாங்கத்தை மறைமுகமாக நிர்மாணிப்பவர்களாக இருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் செயல்படும் போதைப்பொருள் மாஃப்பியா கும்பல் வருடக்கணக்கில் முயன்று சேர்க்கும் பணத்தை சில மாதங்களில் எளிதாக கொள்ளையடித்து விடும் அரசியல் வாதிகள் வேறு இங்கு உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். இதில் நூறு கோடியை தாண்டி விட்ட இந்தியாவில் பிச்சைக்காரர்களை ஒளிக்கும் திட்டங்கள் வேறு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகடியின் எல்லையிலேயே எப்பொழும் இந்தியர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இன்றும் நகரங்களில் மாதம் 300 ரூபாய் என வங்கிகளிலோ, இன்சூரன்ஸ் திட்டங்களிலே சேர்த்து வருகிறார்கள் பாமர மக்கள். 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்றரை லட்சமோ, 2 லட்சமோ கிடைக்கும் என்கிற நற்பாசையில் அவர்கள் இந்த சேமிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். பணவீக்கம் இப்படியே செல்லுமானால், 20 வருடங்களுக்குப் பின் 2 லட்சம் என்பது இப்பொழுதைய 2 ஆயிரம் ரூபாய்க்கு சமமாகி விடும் என்பது நிச்சயம். பின் இப்பொழுது உயிரைக் கொடுத்து சேமித்து வருபவன் 20 வருடங்கள் கழித்து முட்டாளாக்கப்படுவான் என்பது தின்னம். அவர்களுடைய சேமிப்பு அவர்களுக்கு உதவப் போவதில்லை. 2020ல் ஒரு பவுன் விலை லட்சத்தை தாண்டி விடும் என இப்பொழுதே கணிக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் 20 வருடம் கழித்து நிலைமைய என்னவென்று சொல்வது. மூன்றாம் உலகப் போர் என்பது பொருளாதார வீழ்ச்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பதை எத்தனை பேர் உணரப் போகிறார்கள். நாளையை கருத்தில் கொண்டு இன்றே தனது சந்ததியை முடித்துக் கொள்பவன் புத்திசாலியாக இருக்கப் போகிறான் என்பது மட்டுமே உண்மையாகப் போகிறது.


- சூர்யா

கொலைகாரன் வீட்டில் விருந்துண்ணும் ஹிந்தியத் திரைத்துறை

வேறு எங்குமே பார்க்க முடியாது, இப்படிப்பட்ட திணவெடுத்த மூளைகளை. ஹிந்தியத் திரைத்துறையினர் ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகம் இது அல்ல. அவர்கள் இந்திய சூழ்நிலையில் வாழவில்லை. அவர்களுக்கு இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. கடைசியில் அவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை, அறிவுகெட்டத்தனத்தை நிறைவேற்றியே விட்டார்கள்.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைத்துறையினர் கலந்து கொண்டார்கள் என்பது இரண்டாம் பட்சம். அவர்கள் தங்கள் சொந்த மான உணர்வை எங்கு கொண்டு போய் அடகு வைத்தார்கள்? தன் நாட்டு மக்களைக் கொன்றவன் நாட்டில், தன் நாட்டுப் பெண்களை கற்பழித்தவன் வீட்டில் விருந்துண்ணும் மடத்தனம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. அவர்கள் அனைவரிடமும் சில கேள்விகள் நிச்சயமாக கேட்கப்பட வேண்டும்.

1. 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சில வாரங்களில் கொல்லப்பட்ட விஷயம் தெரியுமா? தெரியாதா?

2. தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட விஷயத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்.

3. போர்க்கைதிகளை நிர்வாணமாக்கி தலையில் சுட்டுக் கொன்ற காட்சிகள் கிராபிக்ஸ் காட்சிகள் என்று நினைக்கிறார்களா?

4. தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்பதையும், தமிழர்கள் இந்தியர்கள் தான் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்களா?

5. இங்கு நடக்கும் விஷயங்களை எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

6. உன் சகோதரனைக் கொன்றவன் நாட்டில், உன் சகோதரியை மானபங்கப்படுத்தியவன் நாட்டில் வெட்கமேயில்லாமல், தடித்தோல் எருமை மாட்டுத்தனமாக விருந்துண்டு களிப்பதில் சற்றேனும் வெட்க உணர்வு இருக்கிறதா?

அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. தின்கிற உணவில் உப்பை சிறிதேனும் கலந்து சாப்பிட்டு இருப்பார்களேயானால் மான உணர்வு என்பது சிறிதாவது இருக்கும். எவன் அழைத்தாலும் கூத்தாடிகளைப் போல் சென்று கூத்தடித்துவிட்டு வரும் கேவலமான தன்மையை எங்கு போய் கற்றார்களோ? தன்நாட்டு மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான புஷ் மீது செருப்பை விட்டெறிந்த ஈராக் நாட்டு பத்திரிக்கைகாரன் மூத்திரத்தை வாங்கிக் குடித்தாலும் இவர்களுக்கு சொரணை வரப் போவதில்லை.

பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து சுமார் 200 பேரை சுட்டுக் கொன்ற செயலுக்கும், 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எப்படி வித்தியாசம் பிரித்துப் பார்க்கிறார்கள் இந்த நாடோடிகள்? நாளை பாகிஸ்தானில் ஒரு சர்வதேச திரைப்பட விழா நடைபெறுமானால் அங்கு செல்வார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனெனில் மும்பையில் ‘சாம்னா’வில் ஒருவர் எச்சரிக்கை விடுவார். பாகிஸ்தான் செல்பவர்கள் அங்கேயே இருந்துவிடுங்கள் என்று. இவர்களுக்கெல்லாம் சொல்பவர்கள் சொல்ல வேண்டும் இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று தின்று களித்து பின் கழித்து விட்டு வர சற்றும் தயங்க மாட்டார்கள்.

பல ஆயிரம் திபெத்தியர்களுக்கு இந்தியாவில் அகதிகள் அந்தஸ்து கொடுத்து அவர்கள் செழிப்பாக வாழ வழிவகை செய்துதரும் இந்திய அரசு, இல்லை ஒரு குறிப்பிட்ட கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு அந்த உரிமையை மறுத்துவிட்டது. தனது சுய வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கும் நரித்தனத்தில் ஊறிய சில அதிகாரமிக்க மடமனிதர்களால், பாதிக்கப்பட்ட, உள்ளம் கொதித்த ஆயிரக்கணக்கானோர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.

எந்த ஒரு இனமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட முடியாது. எந்த ஒரு இனமும் முழுமையாக காயடிக்கப்பட்டுவிட முடியாது. இந்தியா ஒரு முழுமையான நாடா இல்லை பல்வேறு சிறுசிறு குழுக்களாக பிரிந்து கிடக்கும் மூளையற்ற மிருகக் கூட்டமா என்று புரியவில்லை. இக்குறிப்பிட்ட விஷயத்தில் அரசியல் என்பது இரண்டாம் பட்சம். முதலில் சொந்தமாக சொரணையுணர்வு வேண்டாமா? அவர்களுக்கு சொரணை வர ஒரு மும்பை பெண், இலங்கை ராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா? வெட்கமில்லாமல் இலங்கையில் சிரித்தபடி சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் மண்டையில் ஏதாவது ஒரு மூலையில், மூளை என்கிற பகுதி 2 சதவீதமாவது ஒட்டிக்கொண்டிருக்கும் பட்சத்தில், இனப்படுகொலை செய்தவன் வீட்டில் விருந்துண்ணுவது, பன்றியானது மலத்தை தேடிச்சென்று உண்பதற்கு சமசமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

படவிழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான் கூறியிருக்கிறார்,

‘போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலநிதி திரட்டவே வந்திருக்கிறோம். மக்களை உற்சாகப்படுத்துவது எங்கள் பணி, அந்தப் பணியை இங்கு வந்து செய்கிறோம்”

நடிகர் சல்மான் கானுக்கு கடைசியில் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் திரட்டபட்ட நிதியை, மகனை இழந்த தாயிடம், தந்தையை இழந்த குழந்தைகளிடம், மானத்தை இழந்த அவரது தமிழ் சகோதரியிடம் கொடுக்காமல் இருந்தால் காரி உமிழப்படுவதிலிருந்து தப்பிவிடுவார். ஆனால் ராஜபக்ஷேவிடம் கொடுத்தால் அவர் சிரித்துக் கொண்டே வெட்கமில்லாமல் வாங்கிக் கொள்வார். உங்களுக்கும் பெருமையாக இருக்கும்.

இவர் போரில் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்த நினைக்கிறார் என்பதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், அவர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சோர்வான மன நிலை குறித்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் என்பது. ஒரு மொக்கை, முட்டாள் அரசியல்வாதி கூட இப்படி ஒரு லூசுத்தனமான லாஜிக்குடன் கூடிய ஸ்டேட்மென்டை கூற மாட்டான். ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்கிற பாடலை மட்டும் ஹிந்தியில் பாடத் தெரிந்தால் அவர் முன் சத்தம் போட்டு பாட சற்றும் தயங்க மாட்டேன். விவேக் ஓபராயும் ஊடுசால் ஓட்டுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை . அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது.

கடைசியில் எல்லா ஆங்கில செய்திச் சேனல்களும் தமிழர்களை ஒரு குறுங்கூட்டமாக ஆக்கிவிட்டது. எவரும் இது தங்கள் நாட்டவர்கள் சார்ந்த பிரச்னை என்று நினைக்கவில்லை. ஏதோ ஒரு கூட்டத்திற்கு நேர்ந்த பிரச்னையாக நினைத்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் உணர்வுகள் என்றுமே மரிப்பதில்லை. கடைசி மனிதனின் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அது கொதித்தபடி உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.


- சூர்யா